Sunday, 18 November 2012

ஈசல் வாழ்க்கை

தென் தமிழ் நாட்டில் இன்றும் பல கோவில்களில் உள்ளே அனுமதிக்க ஜாதியம் பார்க்கின்றார்கள்....கர்நாடகாவில் கூட ஒரு புகழ் பெற்ற கோவிலில் ஜாதி பெயர் கேட்டு தனிதனியே அன்னதானத்திற்கு அனுமதிப்பார்கள்..
.
தென் தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு கோவிலில் வெளியே செருப்பு விடும் போது கவனித்தேன்...கோவில் வாசலில் இருந்த tubelightல் மேலே பெரிய எழுத்தில் உபயதாரர் பெயர் இருந்தது... அதை விட பெரிய எழுத்தில் அவரின் ஜாதி பெயர் இருந்தது அவர் பெயருக்கு பக்கத்திலேயே... 300 ருபாய் tubelight..ஆனால் பெயிண்ட் அடிக்க மட்டும் 30 ருபாய் செலவு செய்து இருப்பார் என நினைத்து கொண்டே சாமி பார்க்க உள்ளே சென்று விட்டேன்..
 
சாமி பார்த்துவிட்டு திரும்புவதற்குள் இருட்டிவிட்டது....இரவு நேரம் ஆனதால் விளக்கை போட்டு இருந்தனர்... அப்போது மீண்டும் வாசலை கவனித்தேன்....
 
 ஒரு நாள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி (ஈசல் பூச்சி) tubelightல் மேலே இருந்த அவரின் ஜாதிப்பெயரை மட்டும் மறைத்து இருந்தது...
 
ஈசல் பூச்சிக்கு கூட தெரிகிறது...மனிதனுக்கு தான் தெரியவில்லை...

Friday, 11 May 2012

பெரியப்பா

என் அப்பா வழி சொந்தத்தில் பெரியப்பா ஒருவர் இருந்தார் ... சொந்தங்களின் வழியில் பார்த்தால் ஏதோ பெயர் சொல்ல தெரியாத ரொம்ப தூரத்து சொந்தம் தான் வரும்... என் அப்பா தான் குடும்பத்தில் மூத்தவர் ஆதலால், அவரே அவரை 'அண்ணா' என்று அழைப்பதால் நாங்கள் எல்லாரும் அவரை பெரியப்பா என்று தான் கூப்பிடுவோம்...

கட்டை பிரம்மச்சாரி....ஒடிசலான உடம்பு...காத்தாடி ராமமூர்த்தி கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்...ராயபேட்டை அருகே  எங்கோ தங்கி இருந்தார்... வீட்டு விசேஷங்களிலும், கல்யாணங்களில் மட்டுமே தலை காண்பிப்பார்...கல்யாண பத்திரிக்கை கூட எங்கப்பா மூலமாக தான் அவருக்கு போய் சேரும்...பல சொந்தங்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது அவருக்கும் பத்திரிக்கை கொடுக்க சொல்லி என் அப்பாவிடம் கொடுத்து விடுவார்கள்..

ரொம்பவும் கோபக்காரர் என்றும் அதனாலே எந்த சொந்தங்களோடும் ஒட்டுதல் கிடையாது....அரசாங்க வேலையில் இருந்ததாகவும் கோபத்தில் அந்த வேலையை விட்டு விட்டார்.. பிறகு கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை  என  சில விஷயங்கள் என் அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அவரை பற்றி..

என் சிறு வயதில் நாங்கள் மயிலாப்பூரில் இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு வரும்போது எல்லாம் முந்திரி பகோடா, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போன்று அன்றைய மிடில் கிளாஸ் குடும்பங்கள் வாங்க முற்படாத விஷயங்களோடு வந்து விடுவார்...எனக்கு சின்ன வயதில் காசு கொடுப்பார் என் அம்மாவிற்கு தெரியாமல்....அதனாலே அவர் மேல் எனக்கு அலாதி ப்ரியம்...

அந்த காலத்து PUC தான் அவர் படிப்பு என நினைக்கிறேன்...பல சமயம் அதை பெருமையாக சொல்வதை கேட்டு இருக்கிறேன்...அந்த காலத்து PUC இந்த காலத்து B .Comக்கு சமம் என்பார்

சில நாட்கள் எனக்கு அம்புலி மாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் , ஜாவர் சீதாராமன் கதைகள்,     என் அப்பாவிற்கு மாலைமதி, ஆனந்த விகடன் என சில நேரம் புத்தகங்களோடும் வருவார்...எல்லாம் அவர் படித்த பழைய புத்தகங்கள் தான் என்பார்....அந்த நேரங்களில் அவர் பக்கத்திலே போய் நின்றால் ' மாச கடைசி குழந்தே, காசு இல்லை, அதனால தான் புக்ஸ் வங்கி வந்தேன்' என்பார்.....எனக்கு வாசிக்கும் வழக்கம் ஏற்பட என் தந்தையை போல அவரும் ஒரு முக்கிய காரணம்

என்ன வேலை பார்க்கிறார், எங்கே தங்கி இருக்கிறார் எதுவுமே எனக்கு தெரியாது...தெரிந்து கொள்ள முற்படாத வயது என்று கூட சொல்லலாம்... உலகத்தின் எல்லா விஷயங்களும் பேசுவார்...சில சமயம் மூச்சு விடாமல் 2 மணி நேரம் கூட பேசுவார் என் அப்பாவிடம்...

அவர் வீட்டிற்கு வந்ததும் என் அம்மா செய்யும் முதல் வேலை சுட சுட பில்ட்டர் காபி தருவது தான்... பல நேரம் அந்த காபி குடித்தவுடன் "உங்களுக்கு வேலை இருக்கும்... நான் வேற எதுக்கு தொந்தரவு" என என் அப்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விடுவார் மனிதர்....

என் அம்மா கோயிலுக்கு சென்று இருக்கும் நேரம் அவர் வந்தால் மட்டுமே ரொம்ப நேரம் என் அப்பாவிடம் பேசிவிட்டு அம்மா வந்தவுடன் காபி கொடுக்க சொல்லி உரிமையோடு கேட்டு குடித்துவிட்டு கிளம்பி விடுவார்.....

என் அப்பா இல்லாத நேரங்களில் பல நேரம் உலக விஷயங்கள் அனைத்தையும் என்னிடம் பேசுவர்... அந்த வயதிற்கு பல விஷயங்கள் எனக்கு புரியாது...புரிந்ததை போல தலையாட்டி தப்பித்து விடுவேன்...உலகத்தில் உள்ள அனைவரும்
ஹிந்துக்கள் என RSSகாரர் போல பேசுவார் ஒருநாள் ....கிரிக்கெட் பிளேயர் பீட்டர் கிர்ஸ்டன் (PETER KIRSTEN) உண்மை பெயர் கிருஷ்ணன் என்பார்...
சேஷ ஐயர் தான் மருவி Shakesphere ஆனார் என்பார்...

திடீரென ஒரு நாள் Sher Sha ஆரம்பித்து வகுத்த நில உச்ச வரம்பு சட்டம் ( Land cieling act ) பற்றி பேசுவார்...அப்படி பட்ட அவர் பேச்சுகளில் மார்க்சியம் தெறிக்கும்.

.ஒரு நாள் தமிழ் மனப்பாட பகுதி முழுவதும் ஒப்பிக்க சொல்லுவார் என்னை...வழக்கம் போல காபி குடிக்கும் வரை தான் உரையாடல் ஓடும் என்னிடம்...பிறகு சிறிது நேரத்துக்கு எல்லாம் கிளம்பி விடுவார்

எனக்கு சற்று விவரம் தெரிந்தவுடன் தான் மனிதர் காபி குடிக்க மட்டும் தான் எங்கள் வீட்டிற்கு வருகிறாரோ என நினைக்க தோன்றியது .. ஒரு காபிக்காக கிட்ட தட்ட 20 அல்லது 30 ரூபாய் செலவு பண்ணி எனக்கு ஏதாவது வாங்கி வருவாரா என்ன.....ஹோட்டலுக்கு போனால் 3 ரூபாய்க்கு காபி கிடைக்கும் அன்றைய நாட்களில்...

என் அப்பாவிடம் பெரியப்பா என்ன வேலை பார்க்கிறார் என கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவார்....

சில நாள் அவர் வரும்போது அவர் தன்னுடைய முழங்கை மடித்து என்னோடு பலப்பரிட்சை செய்வார்...ஒரு நாளும் அவர் தோற்றது கிடையாது...ஆனால் சில நாட்கள் எனக்கு விட்டு கொடுத்து விடுவார்

ஒரு நாள் நண்பன் சரவணன் தலைமையில் KHO KHO  மேட்ச் விளையாட ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் வரை சென்றோம்...நண்பர்களோடு மதியம் சாப்பாட்டிற்கு அங்கே ஒரு ஹோட்டலுக்கு சென்றோம்...கல்லாவில் பெரியப்பா உக்கார்ந்து கொண்டு இருந்தார்...எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது... அவர் என்னை கவனித்ததாக தெரியவில்லை...

சாப்பாடு token வாங்கி கொண்டு வந்தான் ஒரு நண்பன்...பெரியப்பா கல்லாவில் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரம் சில்லறைகளை எண்ணி அடுக்கி கொண்டு இருந்தார்... சிறிது நேரத்தில் முதலாளி போல ஒருத்தர் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்தார்...அவர் வந்துதும் பெரியப்பா அங்கே இருந்து எழுந்து அவருக்கு கல்லா நாற்காலியை  கொடுத்து விட்டு பக்கத்துக்கு டேபிள் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தார்...ரொம்ப நேரம் அவர் அரை வாலி சாம்பாரை கையிலே பிடித்துக்கொண்டு நின்று இருந்தார்...அன்று தான் எனக்கு அவரின் முழங்கை பலத்தின் காரணம் புரிந்தது...

சிறிது நேரத்துக்கெல்லாம் என்னை அவர் பார்த்து விட்டார்... சட்டென்று முகம் மாறியது அவருக்கு... சற்று நேரத்துக்கு பிறகு முதலாளிக்கு தெரியாமல் எங்கள் எல்லாருக்கும் எக்ஸ்ட்ரா அப்பளம், தயிர் எல்லாம் கொடுத்து விட்டு முதலாளியிடம் ஏதோ சொல்லி விட்டு வெளியே போய் விட்டார் அன்று...அவர் சென்ற பிறகு தான் ஹோட்டல் உள்ளே இருக்கும் ஸ்வீட் ஸ்டாலையும் அங்கே இருக்கும் ரசகுல்லா,குலாப் ஜாமுன், முந்திரி பகோடா போன்ற வஸ்துக்களையும், அந்த ஹோட்டல் அருகே இருந்த பழைய பேப்பர் கடையில் இருந்த அம்புலி மாமாவையும், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையும் கவனித்தேன்...

அதன் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு வருவது சுத்தமாக குறைந்தது....ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு நாள் அந்த பக்கம் போகும் போது ஹோட்டல் பக்கம் எட்டி பார்த்தேன்...அன்றும் ஏதோ சப்ளை செய்து கொண்டு இருந்தார்... என்னை பார்த்தவுடன் மசாலா தோசை ஆர்டர் பண்ணி என்னை சாப்பிட சொன்னார்....அவரே எடுத்துக்கொண்டு வந்து சப்ளை செய்தார்...
பிறகு காபி சாப்பிடுறியா? என கேட்டார்... நான் அவரையே பார்த்து கொண்டு இருந்தேன்...என்ன நினைத்தாரோ என்னவோ..."வேண்டாம் ஹோட்டல் காபி
நல்லா இருக்காது.. காபி வேண்டாம்" என்றார்...கல்லாவில் முதலாளி இல்லை அன்றும்..


"வீட்டிற்கு வாங்க பெரியப்பா" என சொல்லி விட்டு வரலாம் போல தோன்றியது எனக்கு... எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன் அன்று...

சில வருடங்களுக்கு பிறகு பல நாள் அந்த ஹோட்டல் பக்கம் போய் இருக்கிறேன்...ஒரு நாள் கூட அவரை அங்கே பார்த்ததில்லை...ஒரு நாள் அவரைப் பற்றி விசாரித்ததில் ஏதோ சண்டை போட்டு கொண்டு வேலையை விட்டு போய் விட்டதாக சொன்னார்கள்....

"ரொம்ப நல்லவன்...ஆனா கோபக்காரன்...காசியில் உள்ள ஏதோ ஒரு மடத்தில் சமையல் வேலை செய்ய போய் விட்டதாக கேள்வி"  என முதலாளி சொன்னார்....

அன்றைக்கு பிறகு சொந்தக்காரர்களின் ஒரு கல்யாணத்தில் கூட அவரை பார்த்ததில்லை ......எனக்கு என்னமோ நான் அவரை கடைசியாக அந்த ஹோட்டலில் பார்த்த அன்றே வீட்டுக்கு வர சொல்லி இருந்தால் அவர் காசிக்கு போயிருக்க மாட்டாரோ என தோன்றியது.....

என் தாத்தா பாட்டி இருவருக்கும் காசிக்கு போய் கர்மா செய்ய வேண்டும் என என் அப்பா சொல்லி கொண்டு இருக்கிறார் சில நாட்களாய் ...அப்பா அம்மாவோடு துணைக்கு காசிக்கு குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் செல்லலாம் என யோசித்து கொண்டு இருக்கிறேன் பெரியப்பாவையும்  மனதில் வைத்து கொண்டு.......

Thursday, 19 April 2012

மழை மனிதர்கள்

மழை மனிதர்கள்

'கபடமற்றவன் பாக்கியவான்' ( Innocence is a Bliss) என ஒரு வசனம் உண்டு பைபளில்.. உண்மையில் அப்படிப்பட்ட கபடமற்ற மனிதர்களை பார்ப்பது வெகு அரிது இன்றைய நாட்களில்...அதுவும் சென்னை போன்ற நம்மூரில்

வெகுளி என்பதை கள்ளம் கபடம் அறியாத சூது வாது தெரியாத என்று சொல்லி வருகிறோம்.

"அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று சிலரை சொல்வதுண்டு... . ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம், கோபம்  என்பதுதான் பொருள். (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)

இரண்டு வாரம் முன்னால் ஒரு நாள் ஸ்ரீரங்கம் சென்று விட்டு ரங்கநாதரை தரிசித்து விட்டு omni வேன் எடுத்துக்கொண்டு அங்கிருந்து 125 km தூரம் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் எங்கள் சொந்த ஊருக்கு சென்றோம்..இரவு 9 மணிக்கு திரும்பவும் திருச்சியில் இருந்து ட்ரெயின் சென்னைக்கு ...


விடிகாலை ஸ்ரீரங்கத்தில் இறங்கி குளித்து விட்டு காலை 9 .30 மணிக்கெல்லாம் சாமி தரிசனம் முடித்துவிட்டோம்.. லாட்ஜுக்கு திரும்பினால் பவர் கட்...திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வரை அனைத்து கோயில்களுக்கும் சென்று விட்டோம் இதற்கு முன்னரே....பவர் கட்டை சமாளிக்க சொந்த ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம்...

ஊருக்கு சென்றால் அங்கே சில கபடமற்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது அங்கே இருந்த ஐந்து  மணி நேரங்களில்...

எங்கள் எதிர் வீட்டில் இருந்த பழைய நண்பன் மாலி என்கிற மகாலிங்கம் என்னை இன்னும் நன்றாக நினைவு வைத்து இருந்தான்...நான் சிறு வயதில் செய்த சுட்டி தனம், விளையாட்டுக்கள் எல்லாம் பற்றி பேசினான்...நான் சிறு வயதில் மூச்சு விடாமல் பாட முயற்சி செய்த கேளடி கண்மணி பாட்டு, பணக்காரன் நூறு வருஷம் பாட்டு  எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தான்...

எனக்குத்தான் ஒன்றுமே நினைவில் இல்லை...யார் பேரும் நினைவில் இல்லை...என்னை பற்றியும் சென்னையில் என் தொழில் பற்றியும், என் இரண்டாவது மகனின் பெயர் வரை அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்து இருந்தான்...

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது... ஏனெனில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டுமே  என் சிறு வயதில் அந்த கிரமாத்தில் ஒரு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு நான் சென்று இருந்தேன்... அவ்வளவு தான்...ஆனால் அவர்கள் இன்னும் என்னை நினைவு வைத்து இருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

மொத்தமே பத்து வீடு தான் எங்கள் தெருவில் ... அனைவரும் என்னை விசாரித்தனர்....வடபழனி புது ஆபீஸ் வரை அவர்கள் என்னை பற்றி update  ஆக இருந்தனர்..

எல்லாரும் மற்றவர் வீட்டு சமையல் அறை வரை சுதந்திரமாக வந்து போகிறார்கள்..ஒருவர் வீட்டில் முருங்கக்காய் காயத்தால் எல்லார் வீட்டிலும் அன்று முருங்கக்காய் சாம்பார் தான்...

எங்கள் பக்கத்துக்கு வீட்டிலோ முருங்கைக்காய் கடையில் விற்கும் வேலைக்கு ஈடாக கொடுத்தால் தான் நாங்கள் அதை பார்க்கவே அனுமதி கிடைக்கும்...


பிடி அரிசி திட்டம் என்று கிராமங்களில் ஒன்று உண்டு...அதில் ஒரு வயதான மனிதர் அங்கே உள்ள கிராமங்களில்  வீடு வீடாய் சென்று பிடி அரிசி பெற்று அதை எடுத்து கொண்டு போய் கும்பகோணத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்க்கும்  வேத பாடசாலைக்கும் வாரம் ஒரு முறை கொடுத்து விட்டு வருகிறார் ...

அவருக்கு என்று தனியாக வேலை எதுவும் கிடையாது... நிலபுலன்கள் இருந்தும் அவர் அதை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு ஆத்ம திருப்திக்காக வீடு வீடாக சென்று அரிசி கேட்டு கொண்டுஇருக்கிறார் ....படு வெள்ளந்தியாக இருந்தார் மனிதன்... ஒடிசலான தேகம்...அழுக்கு வேஷ்டி...அழுக்கு சட்டை... ஏகப்பட்ட வசதி இருந்தும் வெகுளித்தனமாய் என் பையனோடு விளையாடிக் கொண்டு இருந்தார்...

கிளம்பும்போது ஒரு 10 kg அளவு உள்ள ஒரு பூசணிக்காயை கொண்டு வந்து கொடுத்தான் மாலி...புளி, பருப்பு , முருங்கைக்காய் என வேறு சில பொருட்களும் ஏற்றப்பட்டது ஒவ்வொரு வீட்டில் இருந்து எங்கள் காரில்...


சொந்தக்காரர்களுக்கும்  அடுத்த வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தும் சென்ற வாரம் முழுவதும் எங்கள் வீட்டில் 'பூசணிக்காய் வாரம்' கொண்டாடினோம்..

கிராமத்தில் நான் பார்த்த யாரிடமும் கள்ளம் கபடம் இருந்தாக எனக்கு தெரிய வில்லை . அவர்களின் பேச்சு வழக்கையே நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்..உலக விஷயங்கள் பலவற்றில் பின்தங்கி இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..கவலைகள் பல இல்லாமல்..

கிளம்பும்போது குனிந்து வராத காரணத்தால் 'டங்' என்று வாசற்காலில் இடித்து கொண்டேன்...எல்லோரும் சத்தம் போட்டு சிரித்து விட்டு "அதுக்கு தான் ஊருக்கு அடிக்கடி வரணும்" என்றனர்...

எனக்கு அந்த வலி மெயின் ரோடு திரும்பும் வரை இருந்தது....ஆனால் அவர்களின் கபடமற்ற பேச்சுக்கள் என்றும் நினைவில் நிற்கும்...

நேற்று தினமலரில் ஒரு செய்தி பார்த்தேன் .. ஒரு பெண் பஸ்ஸில் இருந்து இறங்கியபின் ஒரே கூப்பாடு போட்டாளாம்... கண்டக்டர் விசில் அடித்து வண்டியை அவசரமாக நிறுத்தினாராம்....

பஸ் நின்றவுடன் அவள் "கூட்டமாக இருந்ததனால் டிக்கெட் வாங்க முடியவில்லை... நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது... இறங்கிவிட்டேன் ....ரெண்டு டிக்கெட் கொடுங்க கண்டக்டர்"  என்றாளாம், குழந்தையை கையில் பிடித்த படியே....பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் அவளை பார்த்து சிரித்தார்களாம்....கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு அதை போன் போட்டு செய்தி ஆபீசுக்கு சொல்லி இருக்கிறார்..இப்படியும் நடக்கிறது நாட்டில்...எனக்கு அந்த பெண்ணின் நேர்மையை விட அதன் பின்னால் இருக்கும் அவளின் கபடமற்ற செயல் தான் பிடித்து இருந்தது....

சென்னையில் சென்ற வாரம் ஒரு ஹார்ட்வேர் கடையில் ஒரு வெள்ளந்தி மனிதனை பார்த்தேன்...பாத்ரூமில் உள்ள ஒரு குழாய் உடைந்து விட்டதாகவும் கடையில் உள்ள ஒருவரிடம் "சார் இந்த பைப் சரியாக இருக்குமா பாருங்கள் என்றார்" கடைக்காரனோ "உங்க வீட்டுல இருக்கிற பைப் அளவு எனக்கு எப்படி சார் தெரியும்" என்று கடுப்படித்தார்...என்ன வேணும்னு கேளுங்க நான் அதை தரேன் என்றார்...

இல்ல சார் அந்த பைப் கூட இந்த கலர் தான் இருக்கும்.. அதனால தான் உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்" என்றார்...வெள்ளந்தியாக... இன்னும் ஒரு படி மேல போய் "அவர் தன்மனைவிக்கு போன் போட்டு அந்த பைப் எப்படி இருக்கும் என்று போன்ல சொல்ல சொல்லட்டுமா சார்".. என்றார்...கடை பையன் தலையில் அடித்து கொண்டான்..

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை ..கடை பையனிடம்  Plumber போன் நம்பர் கேட்டார்...அவன் போன் நம்பர் எடுப்பதற்குள் "சார் எதுக்கும் இது அதே பைப் தானா என்று என் பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு வந்திடறேன் என்று எதையும் எடுக்காமல் திடிரென அங்கே இருந்து ஓடி விட்டார் ......

கடை பையன் திட்டிகொண்டே அந்த பைப்பை உள்ளே கொண்டு போனான்....
கல்லாவில் இருந்த மார்வாடி முதலாளி கடை பையனிடம் . அழகு தமிழில் சொன்னார் ." அந்த ஆளே திட்டாத... இது மாதிரி வெகுளித்தனமா மனுஷங்க இன்னும் இருக்கறதுனால தான் நாட்டுல மழை பெய்யுது" என்றார்..


மார்வாடி சொல்வது உண்மைதான் என்று நினைத்து கொண்டேன்...எனக்கு என்னமோ இவர்கள் போல கபடமற்றவர்கள் தான் 'மழை தருவிக்கும் மனிதர்கள்' என தோன்றியது .

****

Wednesday, 11 April 2012

தங்க ராஜா வடிகட்டி

தங்க ராஜா வடிகட்டி

நான் Blog எழுத துவங்கிய உடனே மயிலாப்பூர் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்...

இன்று நினைத்தாலும்,  நாங்கள் வாடகை வீட்டில் மயிலாப்பூரில் இருந்த நினைவுகள் பசுமையானவை... அதன் பிறகு சொந்த வீடுகள் பல கண்ட போதும் மயிலாப்பூர் வாழ்கை ஒரு சுகானுபவம் என்றே எனக்கு நினைக்க தோன்றும்...

மயிலாப்பூர் கபாலி கோயில், தெற்கு மாட வீதி காய் கறி கடைகள், தண்ணீர் துறை மார்க்கெட், தண்ணி இல்லாமல் கிரிக்கெட் ஆட ஏதுவான கபாலி கோயில் குளம், நான் படித்த PS  மேல் நிலை பள்ளி.....இன்னும் சொல்லி கொண்டே போகலாம்...

இன்று தெற்கு  மாட வீதி மார்க்கெட் மற்றும் தண்ணீர் துறை மார்க்கெட் இரண்டும் இருந்த இடம் தெரிய வில்லை.. இருப்பினும் பல விஷயங்களில் பழமை மாறாமல் மயிலாப்பூர் இன்றும் இருக்கிறது...

மயிலாப்பூரில் ஒரு சொந்த வீடு என்பது, இன்று நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டது...அங்கே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே பாக்யசாலிகள் என்று எனக்கு தோன்றும்...எனக்கும் மயிலாப்பூரில் வீடு வாங்க வேண்டும் என்று ஒரு நீண்ட நாள் கனவு...லட்சியம்...ஆசை....அனைத்தும் உண்டு..

மயிலாப்பூரில் வடுகு (இடையர்) தெருவில் மாடுகளுக்கு நடுவே மனிதர்களும் வாழ்ந்த பருவம் எனது பால்ய பருவம் .......... 'சாணி தெரு' என்றும் அந்த தெருவுக்கு பெயர் உண்டு... மாடுகளால் நிறைந்த தெரு....

புதிய மனிதர்கள் எவரேனும் உள்ளே இரவு நேரத்தில் நுழைந்தால் காலில் மாட்டு சாணி படாமல் எங்கள் தெருவை கடந்து செல்ல முடியாது.... பல வீடுகளின் சுவற்றில் வரட்டி தட்டி வைத்து கிட்ட தட்ட ஒரு கிராமத்துக்குள் இருந்த ஒரு look  கிடைக்கும்...

எங்கள் கிரிக்கெட் நண்பர்கள் வேறு பல வீட்டின் சுவற்றை சாணியால் அடையாளம் பதித்து வைத்து இருப்போம்...ஒரு புது டென்னிஸ் ball கொண்டு விளையாட ஆரம்பித்தால் மூன்று ஓவர் போடுவதற்குள் ball சாணி கலரில் மாறி இருக்கும்...

இன்று அந்த தெருவில் கூட மூன்று மாடி நான்கு மாடி கட்டடங்கள் வந்து விட்டன... ஒரு சிலரே இன்னும் விடாமல் பால் கறந்து சப்ளை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

என் நண்பன் ஒருவனின் தந்தை அப்போது 15 எருமை மாடுகள் 1 பசு மாடு வைத்து ஜீவனம் நடத்திக்கொண்டு இருந்தார்...

நாங்கள் அவனை பார்க்கும்போது எல்லாம் "எப்பொழுதும் உங்க அப்பா உன்னை சேர்த்து 16 எருமை வளர்க்கிறேன் என்கிறாரே டா உண்மையாவா"? என்போம்...
ஆனால் அவன் மட்டும் பால் கறக்கும் தொழிலுக்கு போக மாட்டேன் டா என்பான் எப்பொழுதும் உறுதியாக ...

பல நேரங்களில் அவனின் கரடு முரடான கைகளை தொட்டு பார்த்து இருக்கிறேன்..அவன் அப்பாவுக்கு உடம்பு சுகம் இல்லாமல் போகும்பொழுது எல்லாம் அவன் தான் பால் வேலை முழுவதும் செய்வான்..மாட்டின் மடியில் பால் கறந்து கறந்து அவனின் கைகள் விவசாயியின் கைகள் போல இருக்கும்...

என்னை பொறுத்தவரை பால் தொழிலும் விவசாயம் போல கஷ்டமான தொழில் தான்....விவசாயிக்காவது அடிக்கடி விடுப்பு கிடைக்கும்... ஆனால் பால்காரர் லீவு போட்டு நான் பார்த்ததே இல்லை...

நண்பனின் தந்தை தன் சொந்த அண்ணன் மகனின் திருமணத்துக்கு காஞ்சிபுரம் செல்லாமல் மொத்த தெருவுக்கும் பால் கறந்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது... அவர்களின் மொத்த சொந்தங்களும் திருமணத்துக்கு சென்ற பிறகும் கூட, நாங்களும் அவர்கள் வீட்டு திருமணத்துக்கு காஞ்சிபுரம் சென்று விட்டு காமாட்சி அம்மனையும், வரதராஜரையும், தங்க பல்லியையும் தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது,  அவர் மாடுகளுக்கு வழக்கம் போல புண்ணாக்கும் தண்ணியும் காட்டி விட்டு பால் கறந்து சப்ளை செய்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பகல் 2pm  வந்து மீண்டும் பால் வினியோகம் பண்ணியது என் நினைவை  விட்டு அகலாது....

தீபாவளி அன்று கூட நாங்கள் எல்லாம் புஸ்வானம் சங்கு சக்கரம் கொளித்திக்கொண்டு இருக்கும் அந்த அதிகாலை வேளையிலும் பால்கார நண்பன் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து கொண்டு இருப்பான்...
MGR இறந்த பொழுதும் , ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும்,  கருணாநிதி ஆட்சி Article 356  கொண்டு கலைக்க பட்ட பொழுதும் இரண்டு மூன்று நாட்கள்  ஆவின் பால் வினியோகம் இல்லாத பொழுது, பால் வாங்க எங்கள் தெருவில் கூடிய கூட்டம் மயிலாப்பூர் அறுபத்துமூவரை மிஞ்சும்..

அப்போது எல்லாம் எங்களுக்கு கூட்டத்தை சரி செய்யும் பெரிய்ய்ய பொறுப்பை வழங்கி இருந்தார் நண்பனின் தந்தை...

நெடு நெடுவென வளர்ந்த கிராமத்து மனிதனை போல இருப்பார் நண்பனின் தந்தை...மயிலாப்பூரில் உள்ள வீரபத்ர சுவாமி போல உருவம் என்று கூட சொல்லலாம்

ஆவின் பால் வராத அந்த இரண்டு மூன்று நாட்களும் வயசாளிகளுக்கும், குழந்தை வீட்டில் உள்ளவருக்கும் பால் கொடுப்பார் முதலில்.."மத்தியானம் ரெண்டு மணிக்கு காபி குடிக்கவில்லையெனில் வயசான பெருசுங்க பாடு கஷ்டம் தம்பி என வியாக்யானம் தருவார்"...

அந்த சமயங்களில் அவரின் ரெகுலர் TEA கடைக்காரர்கள் பாலுக்காக வந்து சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள்,.. அப்படி இருந்தும் பொது மக்களுக்கு பால் வினியோகம் செய்து விடுவார் முதலில் அந்த இரண்டு மூன்று நாட்களும்...

சில நாட்களுக்கு முன்பு அறுபத்துமூவர் அன்று அந்த நண்பனை நாங்கள் குடியிருந்த கச்சேரி ரோடு மசூதி அருகே பார்த்தேன்... காலத்தின் ஓட்டத்தில் அவன் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகி விட்டான்... கூடவே கேபிள் டிவி தொழிலும் செய்து வருகிறான்... TATA SKY போன்ற விஷயங்கள் வந்த பிறகு கேபிள் டிவி தொழிலும் சரியாக கை கொடுக்க வில்லை என்றும், தொழிலில் இன்னபிற அரசியல் தலையீடுகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்..

கச்சேரி ரோடு ராயர் மெஸ்ஸில் நீண்ட  காத்திருப்புக்கு பிறகு அடை-அவியல் வாங்கி சாப்பிட்டுவிட்டு பழைய நினைவுகளுக்கு பயணப்பட ஆரம்பித்தோம்...

நண்பன் என்னை விட ஐந்து வயது பெரியவன்... சின்ன வயதில் பல சேஷ்டைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் இருவரும்.. பத்தாவதுக்கு பிறகு படிப்பு ஏறாமல் அவன் பல வேலைகள் அந்த சின்ன வயதிலேயே செய்ய ஆரம்பித்தான்...பால் போடுவது தவிர அனைத்து வேலைகளும்......

பேப்பர் போடுவது துவங்கி, LUZ CORNER ஹரி & கோ வில் சாயந்திரம்
சேல்ஸ்மேன் வேலை, பெட்டி கடையில் சிகரேட் எடுத்து கொடுக்கும் part time வேலை செய்வது வரை அனைத்து வேலைகளும் செய்து விட்டான்..
எந்த வேலையிலும் ரெண்டு மாதங்களுக்கு மேல் தங்க மாட்டான் நண்பன்....
பெட்டி கடையில் வேலை பார்க்கும் பொழுது மெதுவாக அவனுக்கு சிகரேட் பிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது...அப்போது அவனுக்கு 18 வயது இருக்கும் என நினைக்கிறேன்...நான் எட்டாவது படித்து கொண்டு இருந்தேன்...

 எங்கள் தெருவில் புதிதாக ஒரு தம்பதிகள் குடி வந்தனர்...இரண்டு பேரும்  வேலைக்கு சென்று விடுவர்...அப்போது  எல்லாம் சம்பளம் இன்றைய பொழுதுகளில் கிடைப்பதை போன்ற பெரிய சம்பளம் இல்லை...தம்பதிகள் இருவரும் காலை எட்டு மணிக்கு சென்று இரவு எட்டு மணிக்கு மேலே வீடு திரும்புவர்...அவர்களுக்கு அரவிந்த் என்ற ஒரு குட்டி பையன் இருந்தான்...எட்டு அல்லது ஏழு வயது இருக்கும் அவனுக்கு... ஸ்கூல் சென்று விட்டு இரவு அவன் அப்பா அம்மா வரும் வரை தெருவிலேயே திரிவான்...என்னோடும் என் தம்பியோடும் சாயங்காலம் டிபன் எங்கள் வீட்டில் சாப்பிடுவான்... எங்கள் தெருவில் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் வேலைக்கு போகும் அம்மா அரவிந்தின் அம்மா வாகத்தான் இருக்கும்... பல நாள் Uniform கூட கழட்டாமல் தெருவிலேயே திரிவான்... பார்க்க பாவமாய் இருக்கும்...

ஒரு முறை எங்கள் தெரு முனையில் உள்ள மருந்து கடையின் அருகில்  நானும் நண்பனும் நின்று கொண்டு இருந்தோம்...அவன் என்னிடம் சிகரேட் பிடிக்க கற்று தரட்டுமா என்றான்....பயந்து கொண்டே சரி என்றேன்..
உடனே நண்பன் நேராக அவன் வேலை பார்த்த பெட்டி கடைக்கு கூட்டி போனான்... "ரெண்டு தங்க ராஜா வடிகட்டி கொடு" என்றான் (Gold Flake Filter -Kings ய்  எந்த கடைக்கு சென்றாலும் அப்படிதான் அழைப்பான் அவன்)...... என் நல்ல நேரம் அந்த Brand  அன்று அங்கே இல்லை... அடுத்த தெருவில் தான் கிடைக்கும் என்றான்...

அந்த நேரம் பார்த்து அவன் அப்பா மத்தியானம் பால் கொடுக்க அந்த கடைக்கு பக்கத்தில் உள்ள TEA  கடைக்கு வந்தார்... அவரை பார்த்தவுடன் இருவரும் மறைந்து கொண்டோம் கடைக்குள்...அவரும் பால் கொடுத்து விட்டு அடுத்த தெருவுக்கு சைக்கிளில் பறந்தார்....

அந்த நேரம் பார்த்து போன பாராவில் சொன்ன குட்டி பையன் அரவிந்த் அந்த பக்கம் வந்தான்... அவனிடம் நண்பன் "அரவிந்த் நேர பஜார் ரோடுல இருக்கிற மார்த்தாண்டன் பெட்டி கடைல ரெண்டு தங்க ராஜா வடிகட்டி தாங்கயென்று கேளு.. அவர் தருவதை வாங்கிட்டு come  quick "....என்றான்....

மூன்று நான்கு முறை அவன் அந்த வார்த்தையை மனனம் செய்யும் வரை திரும்ப திரும்ப சொல்ல சொன்னான் நண்பன் அந்த குட்டி பையனிடம்...

நான் கூட "ஏன்டா சின்ன பையனை கெடுக்கற என்றேன்"....அவனோ "நாம அவனுக்கு training  தரோம்டா" என சொல்லி விட்டு அவனை பஜார் ரோடுக்கு அனுப்பி வைத்தான்...

பத்து நிமிடம் ஆனது... அவன் அப்பா திரும்பி வரும் நேரம் ஆகியது... அவர் ஏழெட்டு வீட்டுக்கு பால் போட்டு விட்டு TEA கடைக்கு பால் அண்டா எடுக்க திரும்பி வருவார்... அந்த நேரம் அங்கே இருந்தால் கண்டிப்பாக மாட்டி கொள்வோம் என தெரிந்து அந்த இடத்தில் இருந்து நைசாக நடையை கட்டினோம் இருவரும்....

ஐந்து நிமிடம் கழித்து குட்டி பையன் அரவிந்த் ரெண்டு தங்க ராஜா வடிகட்டி யோடு வந்தான்... கடைக்காரன் அழகாக பேப்பரில் சுற்றி அதை அவனிடம் கொடுத்து அனுப்பி இருந்தான்...எங்கள் இருவரையும் அந்த பெட்டிக்கடையில் தேடினான்...எங்களை எங்கே தேடியும் கிடைக்காமல் அவன் என்ன செய்தான் தெரியுமா?

நேராக குட்டி பையன் அரவிந்த் எங்கள் தெருவுக்கு சென்றான்...நண்பனின் அப்பா அப்போது பால் சப்ளை செய்து விட்டு அடுத்த தெருவுக்கு செல்ல பால் எடுத்து கொண்டு இருந்தார்... அவரிடம் நேராக சென்ற அரவிந்த் " Uncle உங்க வீட்டுல இருக்கிற அந்த அண்ணா ரெண்டு தங்க ராஜா வடிகட்டி வாங்கிட்டு அந்த பெட்டி கடைகிட்ட வர சொன்னாரு... ஆனா அவரு அங்க இல்லை...எனக்கு அவசரமா 2 பாத்ரூம் வருது...நீங்க வந்தா அவரு கிட்ட கொடுத்துடுங்க என சொல்லி அந்த இரண்டு சிகரெட்டை அவரிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டான்....

அதற்கு பிறகு நண்பனின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்...

பழைய கதைகள் பேசிவிட்டு கிளம்பும் முன் நண்பனிடம் மயிலாப்பூரில் பழைய வீடு 800 sft ல இருந்து -அரை கிரௌண்டுக்குள்  இருந்தா சொல்லு விலைக்கு... FLAT  வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தேன்...

உங்களிடமும் சொல்லிவிட்டேன்... தெரிந்தால் சொல்லவும்...

Wednesday, 4 April 2012

த/பெ-(தந்தை பெயர்)

த/பெ-(தந்தை பெயர்)
By the time a man realises that his father was right, he has a son who thinks he's wrong -Unknown

இந்த கூற்று யாருக்கு பொருந்துகிறதோ தெரியாது, எனக்கு கண்டிப்பாக பொருந்தும்...

என் 4 1 /2 வயது மகன் என்னை 'இம்சை அரசன் 24 புலிகேசி' என்றும் 'சொதப்பல்ப்பா நீ' என்றும் ஏதாவது காரணம் காட்டி இப்போதெல்லாம் அழைக்கிறான்......

அதனால் தான் சொல்கிறேன், நானும் மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு விதிவிலக்கு அல்ல..

சிறு வயதில் என் அப்பா என்னை திட்டும் போதும் கண்டிக்கும் போதும் பல முறை நான் அவரின் தவறுகளை ஆராய முற்பட்டதுண்டு..

குறிப்பாக 15 அலலது 16 வயதில் விடலை பருவத்தில் நான் 10 வது மற்றும் 11 வது படிக்கும் போது "வீரப்பன் ஏன் இவரை எல்லாம் கடத்த மாட்டேங்கறான்'? என அவர் காதுபடவே என் அம்மா விடம் பல முறை கேட்டு விட்டு அவர் அடிப்பதற்குள் வெளியே ஓடி விடுவேன் ...

இது எனக்கு மட்டும் அல்லாது என் சக வகுப்பில் இருந்த நண்பர்களுக்கும் பொருந்தும்... அனைவருமே அவரவர் அப்பாவை பொது எதிரியாக பார்ப்பதும் மற்ற நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் நண்பனின் அப்பாவை மறைமுகமாய் கிண்டல் செய்வதும் வாடிக்கையாய் கொண்டு இருந்தோம்.... அந்த வயதில் நாங்கள் (நாங்கள் மட்டுமே என்று கூட வாசிக்கலாம் ) அதிமேதாவி என்ற நினைப்பு தான் காரணம்...என் வகுப்பு நண்பர்கள் அனைவரும் தந்தை எனப்பட்டவர் எங்கள்;சிந்தனைகளையும் செயல்களையும் கேள்வி எழுப்பவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்ற 'அறிவார்ந்த' கருத்தை கொண்டு இருந்தோம்.. ஏனென்றால் அது வடிவேலு சொல்வதை போல் 'வாலிப வயசு'

குறிப்பாக 10 வது மற்றும் +1 படிக்கும் பொழுது எங்கள் வகுப்பில் ஒரு வினோத பழக்கம் நிலவியது... அனைவரும் மற்ற நண்பர்களை த/பெ கொண்டே பரவலாக அழைப்போம்... அது மற்றவர்களின் அப்பாக்களை மறைமுகமாக தாக்குவதாக எண்ணி கொள்வோம்...

பல நேரங்களின் நண்பர்களின் அப்பாக்களை மயிலாப்பூர் மார்க்கெட்டில் பார்த்து விட்டு அவர் பெயரை உரக்க கத்தி விட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறேன்..மறு நாள் நண்பனிடம் சென்று "டேய் நேத்து சாயந்தரம் 8 மணிக்கு உங்கப்பாவை மாமி மெஸ் கிட்ட 'புஷ்பநாதன்னு' கத்தி கூப்பிட்டேன்...மனுஷன் திரும்பி திரும்பி யார் கூப்பிட்டது என்று சித்திரை குளம் வரைக்கும் பார்த்துட்டே போனார் டா" என்று சொல்லி சிரித்து கொள்வோம்

ஒவ்வொருவருக்கும் அழகழகாய் modern பெயர் இருந்தும் முந்தைய கால பெயரான தந்தையின் பெயரை சொல்லி கூப்பிட ஆரம்பித்தோம்...

எங்கள் PT மாஸ்டர் பன்னீர் செல்வம் ஐயா எங்களிடம் பெயர் கேட்கும் பொழுது INITIAL இல்லாமல் பெயரை சொல்லிவிட்டால் பிரம்படி தான் மிஞ்சும்..."ஏனல அப்பன் பேரை சொல்ல கசக்குதோ" என தூத்துக்குடி வட்டார தமிழில் கதைப்பார் மனுஷன்...

த/பெ- சொல்லி அழைத்தல் இதன் காரணப்பெயர் ஆராய்ந்தால் நான்கு பாராவக்கு முன்னே சொன்ன காரணத்தையும் தாண்டி வேறு ஒரு உபயோகமும் இருந்தது எங்களுக்கு ... அதை கேட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைபோல் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்க தோன்றும் உங்களுக்கு...

சேரன் என்னவோ அந்த படத்தில் முகத்தை மூடிக்கொண்டு அழவே செய்தார்...எனக்கு என்னவோ சேரன் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கத்தான் செய்தார் என எண்ணுகிறேன்...அவருக்கு அது முதல் படம் ஆனதால் அழுகை இயல்பாக வரவில்லை என நினைக்கிறேன்.. (நீங்கள் வேண்டுமானால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்து பாருங்கள்... அது மற்றவர்க்கு அழுவதை போலவே தோன்றும்...)

சேரனை விட்டுவிட்டு காரணப்பெயர் விஷயத்துக்கு வருவோம் ...எங்கள் பள்ளிக்கு அருகிலேயே இரண்டு பெண்கள் உயர் நிலை பள்ளிகள் இருந்தது தான் அதன் காரணம்...ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு பெண் நண்பர்களை பிடித்து மொக்கை போட்டு கொண்டு இருப்போம்... அப்போது பஸ்சிலோ அல்லது பொது இடத்திலோ நண்பர்கள் பார்த்து விட்டால் அவ்வளவு தான்..

என்ன 'நெடுமாறன்' எப்படி இருக்க? என்போம் அவனின் த/பெ சொல்லி ..அவன் பெயர் என்னோவோ கார்த்திக் என்று இருக்கும்..அவ்வளவுதான் அடுத்த நிமிடம் "என்ன நெடுமாறனா ' கார்த்திக் னு சொன்ன உன் பேரு என்பாள் அந்த பெண்"...மறு நாள் எங்கள் இருவருக்கும் ஸ்கூலில் சண்டை நடக்கும்...

என்னை கூட சந்திரமௌலி என என் அப்பாவின் பெயரீட்டு பல பள்ளி
நண்பர்கள் மௌன ராகம் படத்தில் கார்த்திக் கிண்டல் செய்வதை போல கூப்பிடுவார்கள்...

ரவிக்குமார் என்ற ஒரு நண்பன் இருந்தான் எங்கள் வகுப்பில் ...அவன் அப்பா திரு.கோதண்டம் மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல் ஏட்டு ஸ்தானத்தில் பணியில் இருந்தார்...ஒரு நாள் மதிய இடைவேளையில் நான் "கோதண்டம் இன்னைக்கு சாம்பார் சாதத்துல முட்டைய மறச்சு வச்சு இருக்கான்" என அசைவம் சாப்பிடும் நண்பர்களிடம் போட்டு கொடுத்து விட்டேன்.. அடுத்த நொடி ரவிகுமாரின் அவன் டிபன் பாக்ஸ் மற்ற நண்பர்களால் அபகரிக்க பட்டது....அந்த பஞ்சாயத்து எங்கள் கிளாஸ் டீச்சர் வரை சென்று அடங்கியது...

அன்று முதல் அவன் என்னிடம் சரியாக பேச மாட்டான் ..எவ்வளோவோ முறை நான் மன்னிப்பு கேட்டும் அவன் என்னை சீண்டவில்லை. ஐந்துவருடம் முன்பு  நாங்கள் இருவரும் தேவிகலா வில் நைட் ஷோ 'சண்டகோழி' படம் பார்க்கும் வரை தொடர்ந்தது...(படம் கூட சண்டகோழி) டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருந்தவனிடம் நான் தான் சென்று பேசினேன்..அன்றே அவன் கல்யாண பத்திரிக்கையையும் கொடுத்தான்...அங்கே போயும் திரு.கோதண்டம் அவர்களிடம் பேசி விட்டு வந்தேன்...அன்றைய தேதியில் அவர் போலீஸ் பணியில் இருந்து ஒய்வு பெற்று இருந்தார்...

பள்ளியில் மேலே சொன்ன இந்த முட்டை சம்பவம் நடந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துகொண்டு இருக்கும்பொழுது ஒரு நாள் மயிலாப்பூர் அறுபத்துமூவர் அன்று ரவிகுமாரை நல்லி சில்க்ஸ் அருகே கூட்டத்தில் பார்த்தேன்...அப்பொழுதும் நான் "என்ன கோதண்டம் எப்படி இருக்கே? "என அவனின் அப்பா பெயர் சொல்லி கேட்டேன்.. அவனோ ரொம்பவும் கூலாக உன் பின்னாடி தான் கோதண்டம் நிக்கறார்.... அவரிடமே கேளு என்று சொல்லி விட்டு மூஞ்சியை திருப்பிகொண்டான்..

பின்னாடி பார்த்தால் அவன் அப்பா திரு.கோதண்டம் போலீஸ் உடையில் கையில் லத்தி யோடு என்னை முறைத்து பார்த்தார்..பயந்து கொண்டே கூட்டத்தில் விலகி ஓடியது நினைவில் உள்ளது...

பள்ளி நண்பர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ரீசார்டில் சந்தித்த போதும் பரஸ்பரம் அவர்கள் த/பெ சொல்லி நினைவு முடிச்சுகளை அவிழ்த்து கொண்டோம்....

பள்ளிக்காலம் வரை எனக்கு தெரிந்த ஒரே ரவிகுமாரை அதன் பின் அறிமுகமான மற்ற இரண்டு ரவிகுமரோடு இன்றளவும் முக நூல் (Facebook) போன்ற சோசியல் நெட்வொர்க்கில் வேறுபடுத்தி காட்டுவது அவர்களின் த/பெ தான்.
**********************************************************************************

Saturday, 24 March 2012

தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க சில யோசனைகள்

தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க சில யோசனைகள்
இப்போதெல்லாம் நமக்கு காலை வேளைகளிலே தொ(ல்)லைபேசி அழைப்புகள் வந்து விடுகின்றன......
இன்சூரன்ஸ் பாலிசி எடுங்க சார்,
சென்னைக்கு அடுத்து திண்டிவனம் பக்கம் பிளாட் விற்பனை (சென்னைக்கு அடுத்து தாம்பரம் தான் வரும் என்று 1௦௦ முறை சொல்ல சொல்லி இவர்களை எல்லாம் ஒரு நாள் முழுக்க பெஞ்ச் மேல் நிற்க சொல்ல வேண்டும் போல தோன்றும் எனக்கு),
சென்னையின் நம்பர் 1 கிளப் உத்தண்டி பக்கத்துல இருக்கு சார்-மெம்பர்ஷிப் ஜஸ்ட் Rs .5௦௦௦௦/- ( தலை சுத்த ஆரம்பிக்கும் நமக்கு 'ஜஸ்ட்' என்ற வார்த்தையை கேட்டவுடன் )
கிரெடிட் கார்டு ப்ரீ டெலிவரி பண்றோம் சார், மருத்தவ காப்பீடு எடுத்துகோங்க சார், பர்சனல் லோன் வேணுமா சார்
 ... இப்படி பற்பல அழைப்புகள்...
சில நாட்களாய், அனாதை குழந்தைகளுக்கு பணம் அனுப்ப சொல்லி காலை 10.௦௦ மணிக்கே தொண்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள்..
சில நேரம் எதிர் முனையில் பேசும் பெண்ணின் குரலை கேட்டவுடன் நமக்கும் கோபமும், சில நேரம் பாவமும் மாறி மாறி தோன்றும்...
தொ(ல்)லைபேசி அழைப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என ஒரு நாள் யோசித்தேன்..
 
இதோ சில எளிய வழிகள்..
கால் 1 :
எதிர்முனை.. இன்சூரன்ஸ் பாலிசி எடுங்க சார்,
நான்: ஐயோ என் பொண்டாட்டி இன்சூரன்ஸ் agent ... நானே பாலிசி கிடைக்காம இந்த மாசம் திண்டாடறேன்...
எதிர்முனை.. சிரித்துவிட்டு.... என்ன கம்பெனி சார் நீங்க ...( அப்பொழுதும் போனை வைக்க மாட்டார்கள் சிலர்)
கால் 2 :
எதிர்முனை- சென்னைக்கு அடுத்து திண்டிவனம் பக்கம் பிளாட் விற்பனை
நான்- நானே ரியல் எஸ்டேட் புரோக்கர்... என்கிட்டயேவா
எதிர்முனை-சாரி சார் ( கால் கட்)
 
கால் 3 :
எதிர்முனை:சென்னையின் நம்பர் 1 கிளப் உத்தண்டி பக்கத்துல இருக்கு சார்-
நான்- என்ன கிளப்
எதிர்முனை: Country கிளப் சார்
நான்- போன வாரம் தான் உங்க கிளப் ல மெம்பரா சேர்ந்தேன்..செக் பண்ணிட்டு போன் பண்ணுங்க மேடம்..
எதிர்முனை: சாரி சார்..
 
கால் 4 :
எதிர்முனை: கிரெடிட் கார்டு ப்ரீ டெலிவரி பண்றோம் சார்
நான்- எனக்கு கொடுக்க மாட்டாங்க மேடம்..
எதிர்முனை: ஏன் சார்?
நான்- ஏற்கனவே என் பேரு CIBIL ல வந்து இருக்கு..Default லிஸ்ட் ல என் பேரு இருக்கு மேடம்...
எதிர்முனை: (பதில் ஏதும் சொல்லாமல் போன் துண்டிக்க படும் )
 
கால் 5 :
எதிர்முனை:அனாதை குழந்தைகளுக்கு பணம் அனுப்புங்க சார்
நான்- நான் காலேஜ் ஸ்டுடென்ட் மேடம்...எனக்கே எங்க அப்பா பாக்கெட் மணி கொடுக்கல... ரீசார்ஜ் வேற பண்ணனும்
எதிர்முனை: சாரி சார்
இப்படி பட்ட அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...

Friday, 23 March 2012

வழித்துணை--ஏன் இந்த வலைப்பூ ?

சில நாட்களாகவே மனதில் ஏதோ ஒன்று என்னை உருத்தவோ அல்லது துருத்தவோ செய்து கொண்டு இருக்கின்றது...என் மனைவி கீதாவிடம் எழுத வேண்டும் போல இருக்கிறது என்று பல முறை சொல்லி விட்டேன்...அவளும் சிரித்து விட்டு உனக்கு என்னிடம் பேச மட்டும் நேரம் கிடைக்காது.... மத்த விஷயத்துக்கு மட்டும் நேரம் கிடைக்கும் என்றாள்... சில நண்பர்களிடம் பேசும்போதும் அது என்னுள் வெளிப்பட்டது

வழித்துணை -- இது தான் நான் என் வலைப்பூ விற்கு வைத்த பெயர்..பெட்ரூம் உள்ளே முருகன் படம் மாட்டி வைத்து இருக்கிறோம்..முருகனை பார்த்துக்கொண்டே வழித்துணை என பெயர் வைத்து விட்டேன்....முருகன் வழித்துணை வருவாரா பார்போம்