There was an error in this gadget

Wednesday, 4 April 2012

த/பெ-(தந்தை பெயர்)

த/பெ-(தந்தை பெயர்)
By the time a man realises that his father was right, he has a son who thinks he's wrong -Unknown

இந்த கூற்று யாருக்கு பொருந்துகிறதோ தெரியாது, எனக்கு கண்டிப்பாக பொருந்தும்...

என் 4 1 /2 வயது மகன் என்னை 'இம்சை அரசன் 24 புலிகேசி' என்றும் 'சொதப்பல்ப்பா நீ' என்றும் ஏதாவது காரணம் காட்டி இப்போதெல்லாம் அழைக்கிறான்......

அதனால் தான் சொல்கிறேன், நானும் மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு விதிவிலக்கு அல்ல..

சிறு வயதில் என் அப்பா என்னை திட்டும் போதும் கண்டிக்கும் போதும் பல முறை நான் அவரின் தவறுகளை ஆராய முற்பட்டதுண்டு..

குறிப்பாக 15 அலலது 16 வயதில் விடலை பருவத்தில் நான் 10 வது மற்றும் 11 வது படிக்கும் போது "வீரப்பன் ஏன் இவரை எல்லாம் கடத்த மாட்டேங்கறான்'? என அவர் காதுபடவே என் அம்மா விடம் பல முறை கேட்டு விட்டு அவர் அடிப்பதற்குள் வெளியே ஓடி விடுவேன் ...

இது எனக்கு மட்டும் அல்லாது என் சக வகுப்பில் இருந்த நண்பர்களுக்கும் பொருந்தும்... அனைவருமே அவரவர் அப்பாவை பொது எதிரியாக பார்ப்பதும் மற்ற நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் நண்பனின் அப்பாவை மறைமுகமாய் கிண்டல் செய்வதும் வாடிக்கையாய் கொண்டு இருந்தோம்.... அந்த வயதில் நாங்கள் (நாங்கள் மட்டுமே என்று கூட வாசிக்கலாம் ) அதிமேதாவி என்ற நினைப்பு தான் காரணம்...என் வகுப்பு நண்பர்கள் அனைவரும் தந்தை எனப்பட்டவர் எங்கள்;சிந்தனைகளையும் செயல்களையும் கேள்வி எழுப்பவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்ற 'அறிவார்ந்த' கருத்தை கொண்டு இருந்தோம்.. ஏனென்றால் அது வடிவேலு சொல்வதை போல் 'வாலிப வயசு'

குறிப்பாக 10 வது மற்றும் +1 படிக்கும் பொழுது எங்கள் வகுப்பில் ஒரு வினோத பழக்கம் நிலவியது... அனைவரும் மற்ற நண்பர்களை த/பெ கொண்டே பரவலாக அழைப்போம்... அது மற்றவர்களின் அப்பாக்களை மறைமுகமாக தாக்குவதாக எண்ணி கொள்வோம்...

பல நேரங்களின் நண்பர்களின் அப்பாக்களை மயிலாப்பூர் மார்க்கெட்டில் பார்த்து விட்டு அவர் பெயரை உரக்க கத்தி விட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறேன்..மறு நாள் நண்பனிடம் சென்று "டேய் நேத்து சாயந்தரம் 8 மணிக்கு உங்கப்பாவை மாமி மெஸ் கிட்ட 'புஷ்பநாதன்னு' கத்தி கூப்பிட்டேன்...மனுஷன் திரும்பி திரும்பி யார் கூப்பிட்டது என்று சித்திரை குளம் வரைக்கும் பார்த்துட்டே போனார் டா" என்று சொல்லி சிரித்து கொள்வோம்

ஒவ்வொருவருக்கும் அழகழகாய் modern பெயர் இருந்தும் முந்தைய கால பெயரான தந்தையின் பெயரை சொல்லி கூப்பிட ஆரம்பித்தோம்...

எங்கள் PT மாஸ்டர் பன்னீர் செல்வம் ஐயா எங்களிடம் பெயர் கேட்கும் பொழுது INITIAL இல்லாமல் பெயரை சொல்லிவிட்டால் பிரம்படி தான் மிஞ்சும்..."ஏனல அப்பன் பேரை சொல்ல கசக்குதோ" என தூத்துக்குடி வட்டார தமிழில் கதைப்பார் மனுஷன்...

த/பெ- சொல்லி அழைத்தல் இதன் காரணப்பெயர் ஆராய்ந்தால் நான்கு பாராவக்கு முன்னே சொன்ன காரணத்தையும் தாண்டி வேறு ஒரு உபயோகமும் இருந்தது எங்களுக்கு ... அதை கேட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைபோல் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்க தோன்றும் உங்களுக்கு...

சேரன் என்னவோ அந்த படத்தில் முகத்தை மூடிக்கொண்டு அழவே செய்தார்...எனக்கு என்னவோ சேரன் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கத்தான் செய்தார் என எண்ணுகிறேன்...அவருக்கு அது முதல் படம் ஆனதால் அழுகை இயல்பாக வரவில்லை என நினைக்கிறேன்.. (நீங்கள் வேண்டுமானால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்து பாருங்கள்... அது மற்றவர்க்கு அழுவதை போலவே தோன்றும்...)

சேரனை விட்டுவிட்டு காரணப்பெயர் விஷயத்துக்கு வருவோம் ...எங்கள் பள்ளிக்கு அருகிலேயே இரண்டு பெண்கள் உயர் நிலை பள்ளிகள் இருந்தது தான் அதன் காரணம்...ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு பெண் நண்பர்களை பிடித்து மொக்கை போட்டு கொண்டு இருப்போம்... அப்போது பஸ்சிலோ அல்லது பொது இடத்திலோ நண்பர்கள் பார்த்து விட்டால் அவ்வளவு தான்..

என்ன 'நெடுமாறன்' எப்படி இருக்க? என்போம் அவனின் த/பெ சொல்லி ..அவன் பெயர் என்னோவோ கார்த்திக் என்று இருக்கும்..அவ்வளவுதான் அடுத்த நிமிடம் "என்ன நெடுமாறனா ' கார்த்திக் னு சொன்ன உன் பேரு என்பாள் அந்த பெண்"...மறு நாள் எங்கள் இருவருக்கும் ஸ்கூலில் சண்டை நடக்கும்...

என்னை கூட சந்திரமௌலி என என் அப்பாவின் பெயரீட்டு பல பள்ளி
நண்பர்கள் மௌன ராகம் படத்தில் கார்த்திக் கிண்டல் செய்வதை போல கூப்பிடுவார்கள்...

ரவிக்குமார் என்ற ஒரு நண்பன் இருந்தான் எங்கள் வகுப்பில் ...அவன் அப்பா திரு.கோதண்டம் மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல் ஏட்டு ஸ்தானத்தில் பணியில் இருந்தார்...ஒரு நாள் மதிய இடைவேளையில் நான் "கோதண்டம் இன்னைக்கு சாம்பார் சாதத்துல முட்டைய மறச்சு வச்சு இருக்கான்" என அசைவம் சாப்பிடும் நண்பர்களிடம் போட்டு கொடுத்து விட்டேன்.. அடுத்த நொடி ரவிகுமாரின் அவன் டிபன் பாக்ஸ் மற்ற நண்பர்களால் அபகரிக்க பட்டது....அந்த பஞ்சாயத்து எங்கள் கிளாஸ் டீச்சர் வரை சென்று அடங்கியது...

அன்று முதல் அவன் என்னிடம் சரியாக பேச மாட்டான் ..எவ்வளோவோ முறை நான் மன்னிப்பு கேட்டும் அவன் என்னை சீண்டவில்லை. ஐந்துவருடம் முன்பு  நாங்கள் இருவரும் தேவிகலா வில் நைட் ஷோ 'சண்டகோழி' படம் பார்க்கும் வரை தொடர்ந்தது...(படம் கூட சண்டகோழி) டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருந்தவனிடம் நான் தான் சென்று பேசினேன்..அன்றே அவன் கல்யாண பத்திரிக்கையையும் கொடுத்தான்...அங்கே போயும் திரு.கோதண்டம் அவர்களிடம் பேசி விட்டு வந்தேன்...அன்றைய தேதியில் அவர் போலீஸ் பணியில் இருந்து ஒய்வு பெற்று இருந்தார்...

பள்ளியில் மேலே சொன்ன இந்த முட்டை சம்பவம் நடந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துகொண்டு இருக்கும்பொழுது ஒரு நாள் மயிலாப்பூர் அறுபத்துமூவர் அன்று ரவிகுமாரை நல்லி சில்க்ஸ் அருகே கூட்டத்தில் பார்த்தேன்...அப்பொழுதும் நான் "என்ன கோதண்டம் எப்படி இருக்கே? "என அவனின் அப்பா பெயர் சொல்லி கேட்டேன்.. அவனோ ரொம்பவும் கூலாக உன் பின்னாடி தான் கோதண்டம் நிக்கறார்.... அவரிடமே கேளு என்று சொல்லி விட்டு மூஞ்சியை திருப்பிகொண்டான்..

பின்னாடி பார்த்தால் அவன் அப்பா திரு.கோதண்டம் போலீஸ் உடையில் கையில் லத்தி யோடு என்னை முறைத்து பார்த்தார்..பயந்து கொண்டே கூட்டத்தில் விலகி ஓடியது நினைவில் உள்ளது...

பள்ளி நண்பர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ரீசார்டில் சந்தித்த போதும் பரஸ்பரம் அவர்கள் த/பெ சொல்லி நினைவு முடிச்சுகளை அவிழ்த்து கொண்டோம்....

பள்ளிக்காலம் வரை எனக்கு தெரிந்த ஒரே ரவிகுமாரை அதன் பின் அறிமுகமான மற்ற இரண்டு ரவிகுமரோடு இன்றளவும் முக நூல் (Facebook) போன்ற சோசியல் நெட்வொர்க்கில் வேறுபடுத்தி காட்டுவது அவர்களின் த/பெ தான்.
**********************************************************************************

7 comments:

 1. // அனைவரும் மற்ற நண்பர்களை த/பெ கொண்டே பரவலாக அழைப்போம்.//

  அட எங்கள் ஊரிலும் இது உண்டு !

  //பல நேரங்களின் நண்பர்களின் அப்பாக்களை மயிலாப்பூர் மார்க்கெட்டில் பார்த்து விட்டு அவர் பெயரை உரக்க கத்தி விட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறேன்..//

  பயங்கர ரௌடியா தான் இருந்திருக்கீங்க!

  //அடுத்த நிமிடம் "என்ன நெடுமாறனா ' கார்த்திக் னு சொன்ன உன் பேரு என்பாள் அந்த பெண்"...//

  அட பாவிகளா. கொஞ்ச நஞ்சமாவா பாவம் பண்ணிருக்கீங்க !!

  அருமையான பதிவு. திரட்டிகளில் உடனடியாக இன்றே இணையுங்கள். ப்ளீஸ் Don't miss.

  அவற்றில் இணைத்தால் தான் மற்றவர்கள் இதனை ரசிக்கவும் கமன்ட் போடவும் முடியும். உடனே செய்தால் மட்டுமே பலன் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பர்களே!!! வழித்துணைக்குள் ஒரு புதிய சகோதரத்துணை...

   தந்தை பெயர் என்றவுடன் என் நினைவுக்கு வரும் ஒரு நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

   பள்ளிப்பருவத்தில் தமிழ் வாத்தியார் வருகைப் பதிவேடு எடுக்கும் பொழுது ஒரு மாணவியின் பெயரை தேவி தந்தை பெயர் மூர்த்தி, "மூ தேவி" என்று சேர்த்துக் கூப்பிட அந்த மாணவி எழுந்து நிற்க்க, மொத்த வகுப்பும் கொல்லென்று சிரிக்க; சிரிப்பொலி அடங்கவில்லை...

   இங்ஙனம்
   ராகவேந்திரன்.ச

   Delete
 2. சரளமா எழுதுறிங்க.பள்ளி வயது நினைவுகள் என்றாலே பரவசம்தான். மோகன் சார் சொல்றமாதிரி செய்யுங்க.எனக்கு அதெல்லாம் செய்ய முடியலை.தெரியலை.

  ReplyDelete
 3. கமென்ட்ஸ் இடுவதற்கு word verification கேட்கிறது.இதனை நீக்கி விடுங்கள்.
  ஆர்மி னா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?.படிக்க...http://tamilmottu.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. word verification எடுத்து விட்டேன்

   Delete
 4. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 5. பள்ளி காலங்களில் அது எனக்கு நடந்ததில்லை... கல்லூரிகளில் இப்போதுதான் நடக்கிறது.. நானே "மயிலன் சின்னப்பன் " என்று தான் இப்போது பெயரெழுதுகிறேன்...

  நல்ல பதிவு நண்பரே... அழைப்பிற்கு நன்றி.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete