தங்க ராஜா வடிகட்டி
நான் Blog எழுத துவங்கிய உடனே மயிலாப்பூர் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்...
நான் Blog எழுத துவங்கிய உடனே மயிலாப்பூர் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்றே எண்ணி இருந்தேன்...
இன்று நினைத்தாலும், நாங்கள் வாடகை வீட்டில் மயிலாப்பூரில் இருந்த நினைவுகள் பசுமையானவை... அதன் பிறகு சொந்த வீடுகள் பல கண்ட போதும் மயிலாப்பூர் வாழ்கை ஒரு சுகானுபவம் என்றே எனக்கு நினைக்க தோன்றும்...
மயிலாப்பூர் கபாலி கோயில், தெற்கு மாட வீதி காய் கறி கடைகள், தண்ணீர் துறை மார்க்கெட், தண்ணி இல்லாமல் கிரிக்கெட் ஆட ஏதுவான கபாலி கோயில் குளம், நான் படித்த PS மேல் நிலை பள்ளி.....இன்னும் சொல்லி கொண்டே போகலாம்...
இன்று தெற்கு மாட வீதி மார்க்கெட் மற்றும் தண்ணீர் துறை மார்க்கெட் இரண்டும் இருந்த இடம் தெரிய வில்லை.. இருப்பினும் பல விஷயங்களில் பழமை மாறாமல் மயிலாப்பூர் இன்றும் இருக்கிறது...
மயிலாப்பூரில் ஒரு சொந்த வீடு என்பது, இன்று நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டது...அங்கே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே பாக்யசாலிகள் என்று எனக்கு தோன்றும்...எனக்கும் மயிலாப்பூரில் வீடு வாங்க வேண்டும் என்று ஒரு நீண்ட நாள் கனவு...லட்சியம்...ஆசை....அனைத்தும் உண்டு..
மயிலாப்பூரில் வடுகு (இடையர்) தெருவில் மாடுகளுக்கு நடுவே மனிதர்களும் வாழ்ந்த பருவம் எனது பால்ய பருவம் .......... 'சாணி தெரு' என்றும் அந்த தெருவுக்கு பெயர் உண்டு... மாடுகளால் நிறைந்த தெரு....
புதிய மனிதர்கள் எவரேனும் உள்ளே இரவு நேரத்தில் நுழைந்தால் காலில் மாட்டு சாணி படாமல் எங்கள் தெருவை கடந்து செல்ல முடியாது.... பல வீடுகளின் சுவற்றில் வரட்டி தட்டி வைத்து கிட்ட தட்ட ஒரு கிராமத்துக்குள் இருந்த ஒரு look கிடைக்கும்...
எங்கள் கிரிக்கெட் நண்பர்கள் வேறு பல வீட்டின் சுவற்றை சாணியால் அடையாளம் பதித்து வைத்து இருப்போம்...ஒரு புது டென்னிஸ் ball கொண்டு விளையாட ஆரம்பித்தால் மூன்று ஓவர் போடுவதற்குள் ball சாணி கலரில் மாறி இருக்கும்...
இன்று அந்த தெருவில் கூட மூன்று மாடி நான்கு மாடி கட்டடங்கள் வந்து விட்டன... ஒரு சிலரே இன்னும் விடாமல் பால் கறந்து சப்ளை செய்து கொண்டு இருக்கிறார்கள்...
என் நண்பன் ஒருவனின் தந்தை அப்போது 15 எருமை மாடுகள் 1 பசு மாடு வைத்து ஜீவனம் நடத்திக்கொண்டு இருந்தார்...
நாங்கள் அவனை பார்க்கும்போது எல்லாம் "எப்பொழுதும் உங்க அப்பா உன்னை சேர்த்து 16 எருமை வளர்க்கிறேன் என்கிறாரே டா உண்மையாவா"? என்போம்...
நாங்கள் அவனை பார்க்கும்போது எல்லாம் "எப்பொழுதும் உங்க அப்பா உன்னை சேர்த்து 16 எருமை வளர்க்கிறேன் என்கிறாரே டா உண்மையாவா"? என்போம்...
ஆனால் அவன் மட்டும் பால் கறக்கும் தொழிலுக்கு போக மாட்டேன் டா என்பான் எப்பொழுதும் உறுதியாக ...
பல நேரங்களில் அவனின் கரடு முரடான கைகளை தொட்டு பார்த்து இருக்கிறேன்..அவன் அப்பாவுக்கு உடம்பு சுகம் இல்லாமல் போகும்பொழுது எல்லாம் அவன் தான் பால் வேலை முழுவதும் செய்வான்..மாட்டின் மடியில் பால் கறந்து கறந்து அவனின் கைகள் விவசாயியின் கைகள் போல இருக்கும்...
என்னை பொறுத்தவரை பால் தொழிலும் விவசாயம் போல கஷ்டமான தொழில் தான்....விவசாயிக்காவது அடிக்கடி விடுப்பு கிடைக்கும்... ஆனால் பால்காரர் லீவு போட்டு நான் பார்த்ததே இல்லை...
நண்பனின் தந்தை தன் சொந்த அண்ணன் மகனின் திருமணத்துக்கு காஞ்சிபுரம் செல்லாமல் மொத்த தெருவுக்கும் பால் கறந்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது... அவர்களின் மொத்த சொந்தங்களும் திருமணத்துக்கு சென்ற பிறகும் கூட, நாங்களும் அவர்கள் வீட்டு திருமணத்துக்கு காஞ்சிபுரம் சென்று விட்டு காமாட்சி அம்மனையும், வரதராஜரையும், தங்க பல்லியையும் தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது, அவர் மாடுகளுக்கு வழக்கம் போல புண்ணாக்கும் தண்ணியும் காட்டி விட்டு பால் கறந்து சப்ளை செய்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பகல் 2pm வந்து மீண்டும் பால் வினியோகம் பண்ணியது என் நினைவை விட்டு அகலாது....
தீபாவளி அன்று கூட நாங்கள் எல்லாம் புஸ்வானம் சங்கு சக்கரம் கொளித்திக்கொண்டு இருக்கும் அந்த அதிகாலை வேளையிலும் பால்கார நண்பன் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து கொண்டு இருப்பான்...
MGR இறந்த பொழுதும் , ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், கருணாநிதி ஆட்சி Article 356 கொண்டு கலைக்க பட்ட பொழுதும் இரண்டு மூன்று நாட்கள் ஆவின் பால் வினியோகம் இல்லாத பொழுது, பால் வாங்க எங்கள் தெருவில் கூடிய கூட்டம் மயிலாப்பூர் அறுபத்துமூவரை மிஞ்சும்..
அப்போது எல்லாம் எங்களுக்கு கூட்டத்தை சரி செய்யும் பெரிய்ய்ய பொறுப்பை வழங்கி இருந்தார் நண்பனின் தந்தை...
நெடு நெடுவென வளர்ந்த கிராமத்து மனிதனை போல இருப்பார் நண்பனின் தந்தை...மயிலாப்பூரில் உள்ள வீரபத்ர சுவாமி போல உருவம் என்று கூட சொல்லலாம்
ஆவின் பால் வராத அந்த இரண்டு மூன்று நாட்களும் வயசாளிகளுக்கும், குழந்தை வீட்டில் உள்ளவருக்கும் பால் கொடுப்பார் முதலில்.."மத்தியானம் ரெண்டு மணிக்கு காபி குடிக்கவில்லையெனில் வயசான பெருசுங்க பாடு கஷ்டம் தம்பி என வியாக்யானம் தருவார்"...
அந்த சமயங்களில் அவரின் ரெகுலர் TEA கடைக்காரர்கள் பாலுக்காக வந்து சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள்,.. அப்படி இருந்தும் பொது மக்களுக்கு பால் வினியோகம் செய்து விடுவார் முதலில் அந்த இரண்டு மூன்று நாட்களும்...
அந்த சமயங்களில் அவரின் ரெகுலர் TEA கடைக்காரர்கள் பாலுக்காக வந்து சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள்,.. அப்படி இருந்தும் பொது மக்களுக்கு பால் வினியோகம் செய்து விடுவார் முதலில் அந்த இரண்டு மூன்று நாட்களும்...
சில நாட்களுக்கு முன்பு அறுபத்துமூவர் அன்று அந்த நண்பனை நாங்கள் குடியிருந்த கச்சேரி ரோடு மசூதி அருகே பார்த்தேன்... காலத்தின் ஓட்டத்தில் அவன் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகி விட்டான்... கூடவே கேபிள் டிவி தொழிலும் செய்து வருகிறான்... TATA SKY போன்ற விஷயங்கள் வந்த பிறகு கேபிள் டிவி தொழிலும் சரியாக கை கொடுக்க வில்லை என்றும், தொழிலில் இன்னபிற அரசியல் தலையீடுகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்..
கச்சேரி ரோடு ராயர் மெஸ்ஸில் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அடை-அவியல் வாங்கி சாப்பிட்டுவிட்டு பழைய நினைவுகளுக்கு பயணப்பட ஆரம்பித்தோம்...
நண்பன் என்னை விட ஐந்து வயது பெரியவன்... சின்ன வயதில் பல சேஷ்டைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் இருவரும்.. பத்தாவதுக்கு பிறகு படிப்பு ஏறாமல் அவன் பல வேலைகள் அந்த சின்ன வயதிலேயே செய்ய ஆரம்பித்தான்...பால் போடுவது தவிர அனைத்து வேலைகளும்......
பேப்பர் போடுவது துவங்கி, LUZ CORNER ஹரி & கோ வில் சாயந்திரம்
சேல்ஸ்மேன் வேலை, பெட்டி கடையில் சிகரேட் எடுத்து கொடுக்கும் part time வேலை செய்வது வரை அனைத்து வேலைகளும் செய்து விட்டான்..
எந்த வேலையிலும் ரெண்டு மாதங்களுக்கு மேல் தங்க மாட்டான் நண்பன்....
பெட்டி கடையில் வேலை பார்க்கும் பொழுது மெதுவாக அவனுக்கு சிகரேட் பிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது...அப்போது அவனுக்கு 18 வயது இருக்கும் என நினைக்கிறேன்...நான் எட்டாவது படித்து கொண்டு இருந்தேன்...
எங்கள் தெருவில் புதிதாக ஒரு தம்பதிகள் குடி வந்தனர்...இரண்டு பேரும் வேலைக்கு சென்று விடுவர்...அப்போது எல்லாம் சம்பளம் இன்றைய பொழுதுகளில் கிடைப்பதை போன்ற பெரிய சம்பளம் இல்லை...தம்பதிகள் இருவரும் காலை எட்டு மணிக்கு சென்று இரவு எட்டு மணிக்கு மேலே வீடு திரும்புவர்...அவர்களுக்கு அரவிந்த் என்ற ஒரு குட்டி பையன் இருந்தான்...எட்டு அல்லது ஏழு வயது இருக்கும் அவனுக்கு... ஸ்கூல் சென்று விட்டு இரவு அவன் அப்பா அம்மா வரும் வரை தெருவிலேயே திரிவான்...என்னோடும் என் தம்பியோடும் சாயங்காலம் டிபன் எங்கள் வீட்டில் சாப்பிடுவான்... எங்கள் தெருவில் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் வேலைக்கு போகும் அம்மா அரவிந்தின் அம்மா வாகத்தான் இருக்கும்... பல நாள் Uniform கூட கழட்டாமல் தெருவிலேயே திரிவான்... பார்க்க பாவமாய் இருக்கும்...
ஒரு முறை எங்கள் தெரு முனையில் உள்ள மருந்து கடையின் அருகில் நானும் நண்பனும் நின்று கொண்டு இருந்தோம்...அவன் என்னிடம் சிகரேட் பிடிக்க கற்று தரட்டுமா என்றான்....பயந்து கொண்டே சரி என்றேன்..
உடனே நண்பன் நேராக அவன் வேலை பார்த்த பெட்டி கடைக்கு கூட்டி போனான்... "ரெண்டு தங்க ராஜா வடிகட்டி கொடு" என்றான் (Gold Flake Filter -Kings ய் எந்த கடைக்கு சென்றாலும் அப்படிதான் அழைப்பான் அவன்)...... என் நல்ல நேரம் அந்த Brand அன்று அங்கே இல்லை... அடுத்த தெருவில் தான் கிடைக்கும் என்றான்...
அந்த நேரம் பார்த்து அவன் அப்பா மத்தியானம் பால் கொடுக்க அந்த கடைக்கு பக்கத்தில் உள்ள TEA கடைக்கு வந்தார்... அவரை பார்த்தவுடன் இருவரும் மறைந்து கொண்டோம் கடைக்குள்...அவரும் பால் கொடுத்து விட்டு அடுத்த தெருவுக்கு சைக்கிளில் பறந்தார்....
அந்த நேரம் பார்த்து போன பாராவில் சொன்ன குட்டி பையன் அரவிந்த் அந்த பக்கம் வந்தான்... அவனிடம் நண்பன் "அரவிந்த் நேர பஜார் ரோடுல இருக்கிற மார்த்தாண்டன் பெட்டி கடைல ரெண்டு தங்க ராஜா வடிகட்டி தாங்கயென்று கேளு.. அவர் தருவதை வாங்கிட்டு come quick "....என்றான்....
மூன்று நான்கு முறை அவன் அந்த வார்த்தையை மனனம் செய்யும் வரை திரும்ப திரும்ப சொல்ல சொன்னான் நண்பன் அந்த குட்டி பையனிடம்...
நான் கூட "ஏன்டா சின்ன பையனை கெடுக்கற என்றேன்"....அவனோ "நாம அவனுக்கு training தரோம்டா" என சொல்லி விட்டு அவனை பஜார் ரோடுக்கு அனுப்பி வைத்தான்...
பத்து நிமிடம் ஆனது... அவன் அப்பா திரும்பி வரும் நேரம் ஆகியது... அவர் ஏழெட்டு வீட்டுக்கு பால் போட்டு விட்டு TEA கடைக்கு பால் அண்டா எடுக்க திரும்பி வருவார்... அந்த நேரம் அங்கே இருந்தால் கண்டிப்பாக மாட்டி கொள்வோம் என தெரிந்து அந்த இடத்தில் இருந்து நைசாக நடையை கட்டினோம் இருவரும்....
ஐந்து நிமிடம் கழித்து குட்டி பையன் அரவிந்த் ரெண்டு தங்க ராஜா வடிகட்டி யோடு வந்தான்... கடைக்காரன் அழகாக பேப்பரில் சுற்றி அதை அவனிடம் கொடுத்து அனுப்பி இருந்தான்...எங்கள் இருவரையும் அந்த பெட்டிக்கடையில் தேடினான்...எங்களை எங்கே தேடியும் கிடைக்காமல் அவன் என்ன செய்தான் தெரியுமா?
நேராக குட்டி பையன் அரவிந்த் எங்கள் தெருவுக்கு சென்றான்...நண்பனின் அப்பா அப்போது பால் சப்ளை செய்து விட்டு அடுத்த தெருவுக்கு செல்ல பால் எடுத்து கொண்டு இருந்தார்... அவரிடம் நேராக சென்ற அரவிந்த் " Uncle உங்க வீட்டுல இருக்கிற அந்த அண்ணா ரெண்டு தங்க ராஜா வடிகட்டி வாங்கிட்டு அந்த பெட்டி கடைகிட்ட வர சொன்னாரு... ஆனா அவரு அங்க இல்லை...எனக்கு அவசரமா 2 பாத்ரூம் வருது...நீங்க வந்தா அவரு கிட்ட கொடுத்துடுங்க என சொல்லி அந்த இரண்டு சிகரெட்டை அவரிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டான்....
அதற்கு பிறகு நண்பனின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்...
பழைய கதைகள் பேசிவிட்டு கிளம்பும் முன் நண்பனிடம் மயிலாப்பூரில் பழைய வீடு 800 sft ல இருந்து -அரை கிரௌண்டுக்குள் இருந்தா சொல்லு விலைக்கு... FLAT வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தேன்...
உங்களிடமும் சொல்லிவிட்டேன்... தெரிந்தால் சொல்லவும்...
ஒரு முடிவாத்தான் இருக்கிறீங்க போல...சுவராசியமா இருக்குது...நான் என் பதின் வயதில் என் நண்பனுடன் பால் விக்க போயிருக்கேன்.என் நண்பன் இதுவரை நைட் ஷோ தவிர வேற நேரம் பார்த்தது மிக குறைவு.நான் பால் விக்க போனது என் மனைவியை பாக்க... நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்.... இணைந்திருப்போம்.
ReplyDeleteஇந்திய பாக் எல்லையில் ஜவான் உறங்குமிடம் (புகைப்படம் இணைப்பு) http://tamilmottu.blogspot.in/2012/04/blog-post_11.html
ReplyDeleteஹா ஹா சிறுகதை மாதிரி இருக்கு அந்த சம்பவம். தங்க ராஜா வடிகட்டியை நீங்கள் இன்னும் தொடர்கிறீர்களா? விட்டாச்சா?
ReplyDeleteசில வருடம் பிடித்து விட்டு பிறகு காதலி (என் மனைவி தான்)சொல் கேட்டு விட்டு விட்டேன்...
Deleteவலைவந்து வாழ்தினீர் நன்றி!
ReplyDeleteசுய சரிதை என்றாலும் சுவையான கதை!
சொல்லிய நடையழகு!வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்